Tuesday 3 June 2014

நொறுங்கியது பஞ்சாப்பின் கனவு - சாதித்தது கொல்கத்தா!

                      கிரிக்கெட் உலகம் மிக ஆர்வத்துடன் எதிர்பார்த்துக் காத்திருந்த ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டிகளின் 7 வது தொடரின் மகுடத்திற்கான போட்டி பரபரப்பாக நேற்றிரவு நடந்து முடிந்திருக்கிறது. பல்வேறு சாதனைகள், பதிவுகளை இப்போட்டி விட்டுச் சென்றுள்ளது.

                 கொல்கத்தா எதிர் பஞ்சாப் இடையில் இடம்பெற்ற இப்போட்டியில் கொல்கத்தா வென்று மகுடத்தை இரண்டாவது தடவையாகவும் சூடிக் கொண்டது. கம்பீர் மூன்றாவது தடவையாகவும் மகுடம் பெறும் தலைவரானார். 237 பந்துகளில் 399 ஓட்டங்கள் பெறப்பட்டன. ஒரு சதம் மற்றும் இரண்டு அரைச்சதங்கள் பெறப்பட்டன. 11 விக்கெட்டுகள் இழக்கப்பட்டன.

 

                          மேலும் 32 நான்கு ஓட்டங்கள், 21 ஆறு ஓட்டங்கள் இரு அணிகளாலும் பெறப்பட்டிருந்தன. 14 உதிரி ஓட்டங்கள் வழங்கப்பட்டன. 8 பேர் ஒற்றை இலக்க ஓட்டங்களை பெற்றனர். இந்தப்போட்டிக்கு முன்பதாக இவ்விரு அணிகளும் சந்தித்துக் கொண்ட கடைசி 5 போட்டிகளில் பஞ்சாப் ஒரு போட்டியில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது.

 

 


                     இப்போட்டியின் ஓட்ட விபரங்களை குறிப்பிட வேண்டியதில்லை, எனினும் சுருக்கமாகவேனும் பதிவு செய்வது அவசியமாகிறது. முதலில் துடுப்பெடுத்தாடிய பஞ்சாப் அணி 20 ஓவர்கள் நிறைவில் 4 விக்கெட்டுகளை இழந்து 199 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது. சஹா 55 பந்துகளில் 10 நான்கு ஓட்டங்கள் மற்றும் 8 ஆறு ஓட்டங்கள் அடங்கலாக 115 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டார். பஞ்சாப் வெல்லும் என எண்ணிக் கொண்டிருந்த நேரத்தில் இறுதி நேரத்தில் அதிரடியாக ஓட்டங்களைப் பெற்று சாதித்தது கொல்கத்தா.

                    3 பந்துகள் மீதமாக இருக்க 19.3 ஓவர்களில் 200 ஓட்டங்களை 7 விக்கெட்டுகளை இழந்து பெற்று பஞ்சாப்பின் முதலாவது மகுடத்திற்கான கனவைத் தகர்த்தது கொல்கத்தா அணி. மனிஷ் பாண்டே 50 பந்துகளில் 7 நான்கு ஓட்டங்கள் மற்றும் 6 ஆறு ஓட்டங்கள் அடங்கலாக 94 ஓட்டங்களைப் பெற்றார். ஆட்ட நாயகனாக மனிஷ் பாண்டேயும் தொடர் நாயகனாக க்ளென் மெக்ஸ்வெல்  உம் தெரிவானார்கள்.

          கோடிகளைக் கொட்டிக் கொடுத்த ஐ.பி.எல் நேற்றோடு முடிந்து போனது. இனி அடுத்த வருடம் இதே காலப் பகுதியில் 8 வது தொடர் இடம் பெறக் கூடும். அதற்குள் அணிகள், வீரர்கள், உரிமையாளர்கள் ஏன் ஐ.பி.எல் மாற்றமடைந்தால் கூட ஆச்சரியப்படுவதற்கில்லை.

No comments:

Post a Comment