Wednesday 25 June 2014

கல்யாண வைபோகம் - குறு [வலை] நாவல் - 06


 


 

பகுதி - 03


கல்யாண வைபோகம் - குறு [வலை] நாவல் - 03 




பகுதி - 04


கல்யாண வைபோகம் - குறு [வலை] நாவல் - 04


பகுதி - 05


கல்யாண வைபோகம் - குறு [வலை] நாவல் - 05 








பகுதி - 06




திவ்யாவைப் பற்றிய மேலதிகத் தகவல்களை அறிந்து கொள்ளும் நோக்குடன் நான் "ஹலோ" என்றேன். ஆனால் மறு முனையில் பதில் இல்லை. ஓரிரு வினாடிகளில் இணைப்பு துண்டிக்கப் பட்டது. இணைப்புக் கோளாறா அல்லது நான் பேசவில்லை என்று இணைப்பைத் துண்டித்து விட்டாளா என்பதை அறிந்து கொள்வதற்காக நான் நந்தினிக்கு அழைப்பை ஏற்படுத்தினேன். வாடிக்கையாளரின் தொலைபேசி இலக்கம் நிறுத்தி வைக்கப் பட்டுள்ளதாக ஒரு பெண் குரல் சொல்லிப் போனது.

'ஒரு வேளை இது திவ்யா - நந்தினி யின் விளையாட்டாக இருக்குமோ?' என்று கூட என் மனம் யோசித்தது. நாம் ஒன்று நினைத்தால் நடப்பது வேறொன்றாக அல்லவா இருக்கிறது?

'இது திவ்யாவின் விளையாட்டாக இருந்தால் இந்த பெண் பார்க்கும் படலம் இடம்பெற்றே இருக்காதே? ஆமாம். ஆனால் திவ்யாவுக்கும் நந்தினிக்கும் என்ன உறவு? நந்தினி சொன்னது உண்மையாக இருக்குமா? அதை எப்படித் தெரிந்து கொள்வது? எனது தொலைபேசி இலக்கத்தை திவ்யாதான் கொடுத்தாளா? அல்லது வேறு யாரும் இருக்கக் கூடுமா?' - என்று என் மனதினுள் பலவாறான கேள்விகள் மாறி மாறி எழுந்த வண்ணமிருந்தன. 


ஆனால் ஒன்றை மட்டும் என்னால் உறுதிப்படுத்திக் கொள்ள முடிந்தது. திவ்யா - நந்தினி குடும்பத்தினருக்கிடையில் ஏதோ ஒரு நெருங்கிய பிணைப்பு இருக்கிறது. அது எது என்பது தான் புதிராக இருக்கிறது.




'ஆமா... திவ்யாவோட அம்மா அப்பா இன்னிக்கு அங்க வந்திருக்கலையே...... நமக்குத்தான் அவங்கள தெரியுமே....? இத நாம முன்னமே யோசிக்கலையே?' - மனம் இப்போது தான் இதை மீட்டெடுத்திருந்தது. வர வர குழப்பம் அதிகமாகிக் கொண்டே போகிறதே தவிர குறைவதாயில்லை.

'நாளை திவ்யாவை சந்தித்தால் எல்லாம் தெரிந்துவிடப் போகிறது. அதுவரை பொறுத்திருப்போம்.' என்று மனதுக்குள் சொல்லிக் கொண்டாலும் மனம் அதையெல்லாம் பொருட்படுத்துவதாயில்லை. இன்றைய இரவின் சிறைக் கைதி நான்தான் போலும். மிகக்குறுகிய நேரத்தில் வாழ்க்கை எப்படியெல்லாம் திசைமாறிப் போகிறது? பலநேரங்களில்  மிகக்குறுகிய கால அவகாசத்தில் தான் எனது தீர்மானங்களை எடுக்கும்படிக்கு நிர்ப்பந்திக்கப்பட்டிருக்கிறேன். ஏன் எனது காதலின் முடிவைத் தீர்மானிக்கும் சமயத்தில் கூட. இப்போதும் அதே நிலைதான்.

ஆனால் இன்றாவது கலந்துரையாடுவதற்கான வாய்ப்பை கைவசம் வைத்திருக்கிறேன். ஆனால் அன்று? வேண்டாம்.... வேண்டவே வேண்டாம்.... அதைப்பற்றி நினைத்தாலே உடல் ஒருமாதிரி சிலிர்த்துக் கொள்கிறது. கண்கள் குளமாகின்றன. மனதைக் கல்லாக்கிக் கொண்டு விழியோரம் வழிந்த கண்ணீரை துடைத்துக் கொண்டு நேரத்தைப் பார்த்தேன்.

இரவு ஒன்பது மணி! இரவு உணவுக்கான நேரம். அத்தனை நினைவுச் சுமைகளுக்கு மத்தியிலும் அம்மாவின் சாப்பாட்டு வாசனை மூக்கைச் சற்று பதம் பார்க்கத்தான் செய்தது. திவ்யாவும் நன்றாகச் சமைப்பாள். எதையாவது புதிதாக ஒரு பெயரைச் சொல்லிக் கொண்டு அதைக் கொண்டு வருவாள். அந்தப் பெயர் வாய்க்குள் நுழைவதே இல்லை. ஆனால் அந்த புதிய சமையல்...... அப்படி ஒரு அருமை.



"திவ்யா...... உன் கைப்பக்குவத்துக்கு ஒரு கைக்காப்பு செஞ்சு போடலாம்னு இருக்கேன்...."



"என்ன கிண்டலா?"



"இல்ல... நிஜமாத்தான். அசத்திட்ட...."



தலையைக் கீழே குனிந்துகொண்டு தன் முகத்தில் வெட்கம் படர மென்மையாய்ப் புன்னகைத்தாள்.



"காப்பெல்லாம் வேணா... நீங்க எப்பவும் என் கூடவே இருக்கணும்...."



"கண்டிப்பா....."



இந்நிகழ்ச்சி நடந்து மூன்றாண்டுகளாவது இருக்கும். இன்றோ இருவரும் பிரிவின் கைதிகளாய்.....



எங்கள் 'பிரிவு' என்னும் குழந்தைக்கு இன்று பிறந்தநாள். எப்படியோ சரியாக இரண்டாண்டுகள் உருண்டோடிவிட்டன. நிச்சயதார்த்தத்தில் வைத்து திவ்யாவைக் கண்டதும் இது என் நினைவுக்கு வந்தது. அப்போது ஏதோ ஒரு உணர்வு நெஞ்சை அப்படியே கசக்கிப் பிழிந்தது போலிருந்தது. அதே தினத்திலேயே மீண்டும் சந்தித்திருக்கிறோமே? காலம் 'பிரிவு' என்னும் எங்கள் குழந்தையை காலனுக்கு காணிக்கையாக்க முடிவு செய்து விட்டதோ?
அம்மா உணவு உண்ண அழைத்ததும் ஒரு செயற்கை இயல்பு நிலையை எனக்குள் வரவழைத்துக் கொண்டு அனைவருடனும் அமர்ந்து சாப்பிட ஆரம்பித்தேன். தொண்டைக்குள் இறங்க மறுத்த உணவை கட்டாயப் படுத்தி உள்ளே அனுப்பிக் கொண்டிருந்தேன். சாப்பிடும் போது நாங்கள் எதுவும் கதைப்பதில்லை. அது அப்பாவுக்கு பிடிக்காது. எங்களுடனேயே அம்மாவும் சாப்பிட்டுவிடுவார். எல்லோரும் சாப்பிட்டானதும் எனது அறைக்கு நான் திரும்ப எத்தனித்த வேளை "என்னண்ணா...... பொண்ணப் பத்தி எதுவுமே சொல்லாம போற?" என்று குறும்பாகக் கேட்டாள் தங்கை நிவேதிதா.


அதிர்ச்சியில் ஒரு கணம் நான் உறைந்தே போனேன். 'இவங்களுக்கு என்ன பதில் சொல்றதுன்னு தெரியலையே' என்று குழம்பி நின்றேன்.

"மௌனம் சம்மதம்னு எடுத்துக்கலாமா?" - நிவேதிதா தன் பிடியை விடுவதாயில்லை.

"அதப் பத்தி இன்னும் யோசிக்கல....." தயங்கியவாறே சொன்னேன் நான்.

"இதப் பாருப்பா... யோசிக்கிறேன்னு சொல்லியே காலத்தைக் கடத்திடலாம்னு நினைக்காத. இந்த தடவை ஒரு முடிவ சொல்லிரு. இந்தக் கிழமைக்குள்ள சொன்னாத்தான் நல்ல நாளெல்லாம் பார்க்க வசதியாயிருக்கும். அதுவுமில்லாம சீக்கிரமா ஒரு முடிவ சொன்னாத்தானே நல்லாருக்கும்?" அம்மா தன்னுடைய ஆதங்கத்தை வெளிப்படுத்தினார். செய்வதறியாது குழம்பிப் போனேன் நான்.
"சரிப்பா.... நல்லா யோசிச்சிட்டு உன் முடிவ சொல்லு. களைப்பா இருப்ப.... இப்ப போய் தூங்கு" என்று அப்போதைக்கு ஒரு முற்றுப்புள்ளியைத் தந்தார் அப்பா.


"சரிப்பா" என்றபடி என் அறைக்குள் வந்து கதவைச் சாத்திவிட்டு கட்டிலில் அமர்ந்தேன். மனம் கடலலையென கொந்தளித்துக் கொண்டிருந்தது. இரவின் சிறைக்குள் நினைவுகள் என்னும் வேலிகளிட்டு பூட்டப்பட்டேன் நான். காவல் செய்த களைப்பின் மிகுதியில் இரவும் நினைவுகளும் சற்றுக் கண்ணயர்ந்ததொரு பொழுதில் சற்றே உறங்கிப் போனேன் நான்.
**********


"கல்யாண வைபோகம்" தொடரினை "சிகரம்" வலைத்தளத்தில் தொடர...







பகுதி - 01





பகுதி - 02






 

 

"கல்யாண வைபோகத்தினை" இனிதே நடத்திட கைகோர்த்திடுங்கள் .

-இரு வீட்டார் அழைப்பு-

1 comment:

  1. வணக்கம்
    கதை நன்றாக நகர்ந்து போகிறது அடுத்த பகுதிக்காக காத்திருக்கேன் பகிர்வுக்கு வாழ்த்துக்கள்

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete